அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ளதால், ஈரான் தனது இராணுவ நிலையை முழுமையான தாக்குதல்(fully offensive) நிலைக்கு மாற்றவுள்ளதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மற்றும் முக்கிய மூலோபாயப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பான முன்னேற்றங்கள் முற்றுப்புள்ளியை எட்டியுள்ளன.
இது, கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான தாக்குதல்களுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய மோதலை மேலும் நீட்டிக்கச் செய்யும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பரந்த பிராந்தியத்தில் பதற்றங்களை அதிகரிக்க ஈரானிய அமைப்புகள் ஆயத்தமாக இருக்க வேண்டும்; ஏனெனில் கடினமான முடிவுகளை எடுக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஈரான் தயார் நிலையில் இருக்கும்,” என்று குறிப்பிட்ட அந்த ஈரானிய அதிகாரி, இராஜதந்திர முயற்சிகள் தோற்றால் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடைக்க ஈரான் “சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான” இராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
