ஆந்திர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவர், ஆசிரியர் அடித்ததில் நிகழ்விடத்திலேயே பலியானார்.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தனியார் தொடக்கப் பள்ளியில் பிரணய் தேஜா (6) என்ற மாணவர் எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையில் (ஆக. 20) பிரணய் தேஜா வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தின் அவரை வகுப்பாசிரியர் கண்டித்தார் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, மாணவரை ஆசிரியர் அடித்ததில் மாணவர் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மாணவரை அடிப்பதற்காக ஆசிரியர் முயலும்போது, மாணவர் அழுதுகொண்டே கத்துவதும், மாணவரின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்த சில நொடிகளிலேயே மாணவர் சரிந்து விழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
மேலும், அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கே.ஜி.எச் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே, மாணவரின் உயிரிழப்பையடுத்து, மாணவர் படித்த பள்ளியை அவரது பெற்றோரும் உறவினர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையைத் தாக்கிய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், ஆசிரியரால் பயமுறுத்தப்பட்டதால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மாணவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மாணவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
