டெல்லியில் கடந்த ஜூலை 20 அன்று நடந்த பேரணியின்போது துப்பாக்கி பெல்லட் குண்டு தாக்குதலுக்கு உள்ளான சாஹில் லோச்சாப் அளித்த புகார் மீது டெல்லி பொலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ராகுல் காந்தி நடத்திய போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் தொடர் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களைக் களைக்க பொலீஸார் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட சாஹில் லோச்சாப் என்ற இளைஞரின் கண் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் பெல்லட் குண்டுகள் தாக்கியதில், படுகாயம் அடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரது ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறையில் சாஹில் லோச்சாப் புகார் அளித்தும், அவரது புகார் ஏற்கப்படவில்லை.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், சாஹில் லோச்சாப்பை அழைத்துக் கொண்டு நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பெல்லட் குண்டு தாக்குதல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தினார்.
பின்னர், காவல் நிலைய வாயிலில் அமர்ந்து ராகுல் காந்தி, சாஹில் லோச்சாப் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ், குமாரி செல்ஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களும் போராட்டத்தில் இணைந்தனர்.
காலை முதல் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, சாஹில் லோச்சாப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 118 மற்றும் 125ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின் நகல் புகார்தாரருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராகுல் காந்தியின் போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
