அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே ஆழமான பதற்றங்கள் நிலவி வரும் சூழலில், வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை இரவு மிக ஆடம்பரமான அரசு விருந்து அளித்து உபசரித்தார்.
இந்தச் சிறப்பு விருந்தில் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மாஸ்க், அப்பிள் நிறுவனத்தின் டிம் குக், என்விடியா நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட் மேன் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம், வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை இரு நாடுகளுக்கு இடையிலான தலைவர்களின் பேச்சுவார்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருந்தின் போது பேசிய ட்ரம்ப், “நானும் அதிபர் ஜின்பிங்கும் இரு வேறுபட்ட நிர்வாக முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம். இருந்தாலும், நமது நாட்டு மக்களுக்கு இடையிலான பிணைப்பு எப்போதும் தொடரும்” என்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில் ‘‘அமெரிக்காவும் சீனாவும் அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதுடன் பொறுப்புள்ள முதன்மை நாடுகளாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.
