மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே உறுப்பினர் நா. பகீரதன் நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்தார்.
கல்லூண்டாய் குப்பை மேடு அடிக்கடி தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
குப்பை மேட்டில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் ஏற்படும் புகையைச் சுவாசிப்பதன் மூலம் மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும், மானிப்பாய் பிரதேச சபையிலும் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
கல்லூண்டாய் குப்பை மேட்டில் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே நெருப்பு சட்டியுடன் சபைக்குள் வந்ததார் எனவும் உறுப்பினர் நா. பகீரதன் குறிப்பிட்டுள்ளார்.
