திருவிழாக்களில் வாணவேடிக்கைகளையும் களியாட்டங்களையும் முற்றிலும் நிறுத்துக!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சைவத் திருக்கோவில் ஒன்றில் இடம்பெற்ற திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என்று தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற திருவிழாவின் அதீத வெளிச்சத்தால் பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை துயரமளிக்கின்றது. கடந்த மாதங்களில் சில ஆலயத் திருவிழாக்களில் இடம்பெற்ற விரும்பத்தகாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருத்த விசனத்தை ஏற்படுத்தியிருந்தன.

சைவ பரிபாலன சபை மற்றும் இந்து கலாச்சார திணைக்களம் ஆகியவை திருக்கோயில்களிடம் சில ஒழுங்குவிதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே, எக்காரணம் கொண்டும் ஆலயத் திருவிழாக்களில் இவ்வாறான களியாட்டங்களுக்கோ, அதிக வெளிச்சப் பாய்ச்சல் நிகழ்வுகளுக்கோ அல்லது அதிக ஒலி எழுப்புதலுக்கோ இடமளிக்க வேண்டாம்.

“கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்” என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த சைவப் பெருமக்களையும் கேட்டுக்கொள்வதோடு, சட்டத்தை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கோருகின்றோம். அவர்களுக்கு அனைத்துச் சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம் பெற அன்பே உருவான இறை சிவனைப் பிரார்த்திக்கின்றோம்.” – என்று தவத்திரு அகத்தியர் அடிகளார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles