வவுனியாவில் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறை

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்றைய தினம் (21) தீர்ப்பளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 14 ஆகும்.

இது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிக்கை 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்ததையடுத்து, சிறுமி தந்தையின் பாதுகாப்பிலேயே வசித்து வந்துள்ளார்.

குற்றச்செயல் நடந்த சந்தர்ப்பத்தில் சிறுமிக்கு வெறுமனே இரண்டரை வயதான தங்கையும் இருந்துள்ளார். சம்பவத்தன்று தந்தை மதுபானம் அருந்திவிட்டு வீட்டிலேயே வைத்து இக்குற்றச்செயலைப் புரிந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகள் மற்றும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்தில் கொண்டு இக்கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

இதன்பிரகாரம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறின் மேலதிகமாக 1 வருடம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும், அதைச் செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

இத்தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களைப் பாதுகாக்கும் முகமாகவும், சமூகத்தில் இவ்வாறான பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்றால் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எச்சரிக்கையைச் சமூகத்தில் விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles