மலேசியாவின் சபா, லாஹாட்டத்து அருகேயுள்ள ஜாலான் புக்கிட் பாகாஹாக் வனக் காப்பகச் சாலையில், கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து 5 மீற்றர் ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் நேற்று திங்கள்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் பயணித்த கார், சாலையில் இருந்த ஒரு வளைவைக் கடக்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகிச் சென்று, 5 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்திற்குள் தூக்கி வீசப்பட்டதாக நம்பப்படுவதாக, லாஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சும்சுவா ரஷீத் கூறினார்.
இரவு 7.38 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, “சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினர், காரில் பயணித்த நான்கு பேரைக் கண்டறிந்தனர். எனினும், அவர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். காயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த மூவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
