தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். தாவடியில் அனுஷ்டிப்பு!

Group of men in light clothing gathered on a street for a traditional lamp-lighting ceremony, a brass ceremonial lamp at center.

Group of men sitting on plastic chairs under colorful flower garlands at an outdoor gathering.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் – தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்றது.

1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2ஆம் திகதி தாவடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு, அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

1918ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி கந்தரோடையில் பிறந்த அமரர் வி. தர்மலிங்கம், உடுவில் கிராம சபையின் தலைவராக ஐந்து தடவைகளுக்கு மேல் தொடர்ச்சியாகவும், பின்னர் சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பணியாற்றினார். 1960 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அவர், இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து தடவைகள் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles