முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய புதையல் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் நேற்று அகழ்வுப் பணியை ஆரம்பித்தனர்.
அகழ்வுப் பணி தொடர்பாக செய்தி சேகரிப்பிற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, அகழ்வு நடைபெறும் பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை எனவும், முதலாம் நாள் அகழ்வுப் பணியின்போது எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ அல்லது வேறு பொருட்களோ மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
