நேபாள பெருவெள்ளத்துக்கான காரணங்களை அடுக்கும், இயற்கையை சுரண்டாமல் இருக்க எச்சரிக்கும் செய்திகள் எல்லாம் அணிவகுத்து வரும் நிலையில், தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது நேபாள வெள்ளத்தை தாக்குப்பிடித்த ‘வைரல்’ வீடும் அதைப் பற்றிய பின்புலத் தகவலும்.
நேபாள வெள்ள உயிரிழப்பு செப்ரெம்பர் 3 நிலவரப்படி 1250ஐ கடந்துள்ளது. 1,200 வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 1,000 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் நேபாள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக நேபாள வெள்ளச் சேதங்கள் எல்லைகள் கடந்து உலகையே உலுக்கியிருக்கும் அதே வேளையில், வெள்ளத்தை தாக்குப்பிடித்து நிலைத்து நின்ற பச்சை நிற வீடு ஒன்று சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இயற்கைப் பேரிடர்களின்போது இதுபோன்ற கதைகள் ஒன்றிரெண்டு வருவது வழக்கம்தான். ஆனால், ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளமும், அதில் நடுவே நிலைத்திருந்த பச்சை நிற வீடும், வெள்ளம் வர வர குடும்பம் மொத்தமும் மேல்தளத்தில் தஞ்சமடைந்து நின்ற காட்சிகளும் சர்வதேச அளவில் வைரலானது காண்போருக்கு ஆச்சரியத்தை கடத்தியிருக்கிறது.
சிலர் அது இறை ஆசியுடனும், இன்னும் சிலர் அதை கட்டடத்தின் உறுதித்தன்மையுடனும் தொடர்புப்படுத்திக் கொண்டாடுகின்றனர். இந்நிலையில், வைரல் வீடு பற்றியும், அதில் சிக்கிய குடும்பத்தைப் பற்றியும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
சத்ர பஹதூர் பியாகுரேல் என்பவர்தான் நேபாள பெருவெள்ளத்தைத் தாக்குப்பிடித்த அந்த வியத்தகு வீட்டின் உரிமையாளர். 67 வயதான அந்த நபர் ஓகஸ்ட் 26 காலையில் வழக்கம்போல் தனது பேரனை பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே வெள்ளம் அவரது வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளது. ஒரு சில விநாடிகளில் என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்கு முன்னரே அவரது வீட்டினுள் வெள்ளம் புகுந்துள்ளது. உயிர்பிழைக்க வீட்டின் அடுத்தடுத்த மேல் தளங்களுக்குச் சென்ற அவரும், அவரது குடும்பத்தினரும் கடைசியாக மொட்டைமாடியில் தஞ்சமடைந்தனர்.
கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் குடும்பம் முழுவதும், தங்களைச் சுற்றி பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை அச்சத்துடன் பார்த்து பயத்தில் உறைந்து நின்றுள்ளது.
இது குறித்து சத்ர பஹதூர் பியாகுரேல் அளித்த ஊடகப் பேட்டியில், “அத்தனை பெரிய வெள்ளப் பெருக்கை பார்த்தபோது உயிர் பிழைப்போமா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல இனி செய்வதற்கு ஒன்றுமில்லை எனத் தோன்றியது. இனி கடவுள்தான் நாங்கள் பிழைக்க வேண்டுமா, மூழ்க வேண்டுமா என்பதை முடிவு செய்வார் என்ற முடிவுக்கு வந்தோம்.
எனது ஒரே கவலைமெல்லாம் நாங்கள் குடும்பத்தோடு உயிரிழந்துவிட்டால் பள்ளிக்குச் சென்றிருந்த எனது பேரனின் நிலை என்னவாகும் என்பதாகவே இருந்தது.
வீட்டின் தரைத்தளம் 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது எனக்கொரு மளிகைக் கடை இருந்தது. பின்னர் மதுபான மொத்த விற்பனை தொழிலையும் மேற்கொண்ட போது அடுத்தடுத்த தளங்களைக் கட்டினேன்.
வீடு கட்டும்போது அஸ்திவாரத் தூண்கள் பலமாக அமைக்கப்பட்டன, அதனால் கூட வெள்ளத்தில் என் வீடு தப்பியிருந்திருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இறையருள் நிறைவாக இருந்தது என்பேன்.
இப்போதைக்கு காத்மாண்டுவுக்கு இடம் பெயர்ந்துள்ளோம். வீட்டின் மொத்த சேதத்தையும் இன்னும் மதிப்பீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். பாஸ்போர்ட், வீட்டின் பத்திரங்கள், ஆதார் அட்டை உள்பட பல ஆவணங்களை இழந்து நிற்கிறோம்.
ஆனால், எல்லோரும் உயிருடன் இருக்கிறோம். என் பேரனும் ஒரு நாளைக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துவிட்டான். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
வெள்ளம் வடிந்த நிலையில் சத்ர பஹதூர் பியாகுரேலின் வீட்டுக்குச் செல்லும் வழியும் பகுதியாக சீரமைக்கப்பட்டுள்ளது. சேறும் சகதியும் சூழ்ந்திருக்கும் சூழலில் துங்கே பஜாரில் (Dhunge Bazaar) உள்ள அந்த வைரல் வீட்டைக் காணவும், அதைப் பின்னணியாக வைத்து செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வீடு கூகுள் மப்பில் கூட வெள்ளத்தை தாங்கும் இடமென்று ஓர் அடையாளத்தைப் பெற்றுள்ளது.
அந்த வீட்டின் முதல் இரண்டு தளங்களும் சேறும், சகதியும் நிரம்பிக் கிடக்க மூன்றாவது தளம் மட்டுமே வெளியில் தெரிகிறது. அங்கு ஒரு வோஷிங் மெஷின், சில அழுக்குத் துணிகள், தண்ணீர் தொட்டிகள், சோலர் வோட்டர் ஹீட்டர், குடும்பத்தினரின் கோயில், சில செடிகள் மட்டும் அப்படியே இருக்கின்றன.
இந்நிலையில், வெள்ளத்தைத் தாக்குப்பிடித்த வீடு குறித்து பல்வேறு கருத்துகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன, வெள்ளத்தின் பாதையில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு மேடான நிலப்பரப்பு அதைப் பாதுகாக்க உதவியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வெள்ளத்தைத் தாக்குப்பிடித்த அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிலரில் ஒருவர், “நேபாள பெருவெள்ளத்தில் இந்த வீடு தப்பித்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வீட்டை வெள்ளம் சூழ்ந்த வீடியோக்களைப் பார்த்தபோது எனக்கு 1% கூட நம்பிக்கை இல்லாமலேயே இருந்தது” என்றார்.
பெருவெள்ளத்தை தாக்குப்பிடித்த அந்த வீடு ஒரே நேரத்தில் துயரத்தின் சாட்சியாகவும், நம்பிக்கையை விதைக்கும் சாட்சியாகவும் இருக்கிறது.
