வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம், பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் நோக்கி முன்னெடுக்கப்பட்டது.
தபாலகத்திற்குச் சொந்தமான காணி, நீதிமன்றத்திற்குச் சொந்தமான காணி மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குச் சொந்தமான காணிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பருத்தித்துறை வெளிச்ச வீடு அமைந்துள்ள பகுதியையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த பகுதிகளில் இருந்து இராணுவத்தினரும் கடற்படையினரும் வெளியேற வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டி போல் டக்லஸ் போல், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
