மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லொறி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்து குறித்து பொலிஸார் கூறியதாவது:
மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா மாவட்டம் லக்னி தாலுகாவில் உள்ள மானேகான் மற்றும் பிம்பல்கான் பகுதிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பொலிரோ எஸ்யூவி கார் ஒன்று சரக்கு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் , உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானவர்கள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 53 வழியாக நாக்பூருக்கு வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
