பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம், உலகத் தலைவர்களுடனான முக்கிய இருதரப்பு சந்திப்புகளைத் தொடங்கியுள்ளார்.
புது டெல்லி சென்றடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அன்வர் தனது முதல் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் மலேசியா-ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
குறிப்பாக, மலேசியா – ரஷ்யா இடையிலான நேரடி விமானச் சேவையை விரைவுபடுத்துவது, விசா இல்லாத பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ரஷ்யாவுக்கான மலேசிய பாமாயில் ஏற்றுமதியை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகளை விரைவாகச் செயல்படுத்த சிறப்பு வழிமுறை ஒன்றை உருவாக்கவும் இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எத்தியோப்பிய பிரதமர்அபி அகமட் ஆகியோருடன் அன்வார் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
கசகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுடனான சந்திப்பும் அவரது நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் சந்திப்புகளுடன், இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அன்வார் தனித்தனியாக சந்திக்கிறார். உள்கட்டமைப்பு, பொறியியல், உணவுத் தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாடு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
2025 ஜனவரி 1 முதல் பிரிக்ஸ் நட்பு நாடாக இடம்பெற்றுள்ள மலேசியா, இந்த மாநாட்டின் வாயிலாக உலகளாவிய பொருளாதார மற்றும் அரசதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்த முனைகிறது.
