ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு – மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (10) ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல டிரோன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதலை ஈராக் அரசாங்கமும் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினர்களுக்கும் இடையிலான மோதலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாப்-எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகள் தொடர்பிலும் ஹௌதிகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மண்டேப் நீரிணை, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதனால் அப்பகுதியில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சவூதி அரேபியா மூடியுள்ள எண்ணெய் குழாய் வழித்தடம் மூலம் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 மில்லியன் கொள்கலன் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
குழாய் மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
