2029 உலக தடகளத் தொடரை நடத்தும் முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றது கென்யா

2029 ஆம் ஆண்டிற்கான உலக தடகளத் சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரை நடத்தும் உரிமையை கென்யா வென்றுள்ளது.

இதன் மூலம் இத்தொடரை நடத்தும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையை அந்நாடு தன்வசமாக்கியுள்ளது.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள 48,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ‘கசராணி’ (Kasarani) விளையாட்டரங்கில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டியை நடத்துவதற்காகப் போட்டியிட்ட லண்டன் மற்றும் ரோம் ஆகிய நகரங்கள் வாய்ப்பை இழந்த நிலையில், 2031 ஆம் ஆண்டிற்கான போட்டிகளை நடத்தும் உரிமை ஜேர்மனியின் முனிச் (Munich) நகரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கென்யா, இதுவரை உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் 72 தங்கம் உட்பட பல பதக்கங்களையும், ஒலிம்பிக்கில் 38 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

இத் தொடரின் வரலாற்றில் இரண்டாவது மிக வெற்றிகரமான நாடாகத் திகழும் கென்யாவின் இந்த விளையாட்டு பாரம்பரியமே ஏலத்தை வெல்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

இரண்டு முறை ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியனும், 2003 உலக சாம்பியன்ஷிப்பில் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவருமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), நைரோபிக்கான ஆதரவைக் கோரும் ஏலச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தார்.

உலகின் முன்னணி தடகள வீரர்களை ஆபிரிக்கக் கண்டம் உருவாக்கியிருந்த போதிலும், இதுவரை சிரேஷ்ட பிரிவினருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் அங்கு நடைபெற்றதில்லை என்பதால் இத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது.

முன்னதாக 2017 உலக 18 வயதிற்குட்பட்டோர் தடகளப் போட்டி, 2021 உலக 20 வயதிற்குட்பட்டோர் தடகளப் போட்டி மற்றும் 2007 மொம்பாசாவில் நடைபெற்ற உலக குறுக்கோட்டப் பந்தயம் (World Cross Country) ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திய அனுபவத்தையும் கென்யா தனது ஏலத்தின் போது சுட்டிக்காட்டியிருந்தது.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான உலக சாம்பியன்ஷிப் தொடரை நடத்தக் கென்யா முயன்ற போதிலும், உள்கட்டமைப்பு பலவீனங்கள் காரணமாக அந்த வாய்ப்பு டோக்கியோவிற்குச் சென்றது. எனினும், இம்முறை விளையாட்டு வசதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீனமயமாக்கல்களைச் சுட்டிக்காட்டி கென்யா தனது தயார்நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு தான்சானியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆபிரிக்கக் கிண்ணப் கால்பந்தாட்டத் தொடரை (AFCON) நடத்தவுள்ள கென்யா, அதற்காகத் தனது விளையாட்டரங்குகளைப் புனரமைத்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாகவே கசராணி விளையாட்டரங்கமும் முழுமையான கட்டமைப்பு சீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles