நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இது, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். இப்படம் ஓடிடி-யிலும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப்படம் அங்கும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் ஹொலிவூட்டில் றீமேக் ஆக இருக்கிறது. ஹொலிவூட்டின் முன்னணி நிறுவனம் ஒன்று இப்படத்தின் றீமேக் உரிமையைப் பெற்றுள்ளது.
இதில் பிரபல நடிகர் மத்யூ மெக்கோனஹியை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியுள்ளார். இப்படத்தின் ஹொலிவூட் றீமேக் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹொலிவூட்டில் றீமேக் ஆகும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் கூறும்போது –
“இந்தப் படம் வெளியாகி 2 ஆண்டு ஆகிவிட்டன. இன்னும் இப்படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹொலிவூட்டில் றீமேக் ஆவது தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இருக்கும். அடுத்து ‘மகாராஜா 2’ படத்துக்கான எழுத்துப் பணிகளில் இருக்கிறேன்” என்றார்.
