வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் செலவில் 12,000 ரி-சேர்ட்களை விநியோகித்தமை தொடர்பான விவகாரங்களில் பெசில் ராஜபக்ச மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படும் அவரைக் கண்டறிவதற்கும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்டர்போலின் நீல அறிவிப்பை கோரியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
