சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினாரெனக் கூறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய வழக்கு விசாரணை ஒன்றின் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
எனினும், நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாது என சபாநாயகர் தொடர்ந்தும் எச்சரித்தார். இதையடுத்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நீதிமன்ற தீர்ப்புக் குறித்து வழக்கின் சந்தேக நபரான ஒருவர் கருத்து தெரிவிப்பது தவறானது என்று கூறினார்.
ஆனால், இதனைப் பொருட்படுத்தாத சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்து சபையில் கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து அவரை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்ற செயலருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, சாமர சம்பத் தசநாயக்காவின் செயல்பாடுகளால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
