அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா திரைப்படம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா. இதில், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தியத் திரையுலகம் ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கா படத்திற்காக உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராக்கா திரைப்படம் ஒரு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பில் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நிகழ்நேர மோஷன் – கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்தது கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென 37 நடிகர்களின் அசைவுகள் நிகழ்நேர மோஷன் – கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்டது.
Advertise with us
மோஷன் – கேப்சர் என்பது நடிகர்களின் உடல் அசைவுகள் மற்றும் முகப் பாவனைகளைச் சிறப்பு சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கணினியில் டிஜிட்டல் கதாபாத்திரங்களாக மாற்றும் அதிநவீன தொழில்நுட்பம்.
வழக்கமாக மோஷன் – கேப்சர் தொழில்நுட்பத்தில் ஒரு சில நடிகர்களை மட்டுமே ஒரே நேரத்தில் படம்பிடித்துள்ள நிலையில், ராக்கா திரைப்படத்தில் 37 பேர் ஒரே நேரத்தில் படம்பிடிக்கப்பட்டது உலகத் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சாதனைக்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணைந்து பெற்றுக்கொண்டனர்.
