”நாமல் ஜனாதிபதியானதும் நான் அமைச்சர்” – அர்ச்சுனா தெரிவிப்பு

“2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றினால், வடக்கைக் கட்டியெழுப்புவதற்கு அவர் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைக் கோருவேன்.”

இவ்வாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு வடக்கில் 15 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கப்பெறக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தனியார் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:

“நாமல் ராஜபக்ச நேரடியாகவும் வெளிப்படையாகவும் பேசக்கூடிய ஒரு நபர்; எமது பிரச்சினைகளை அவரிடம் கூற முடியும். அதேபோல, கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்துள்ளன என்பதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச தற்போது சிறந்த அனுபவத்துடன் பேசுகின்றார்; அவரிடம் ஒரு மாற்றத்தைக் காண்கின்றேன்.

ஜனாதிபதி பதவிக்கு வருவதற்குரிய தகுதி அவருக்கு இருப்பதை உணர்கின்றேன்; வேறு நபர்களிடம் அந்தத் தகுதியைக் காணவில்லை.

நாமல் ஜனாதிபதியான பின்னர் அவரைச் சுற்றி இருப்பவர்கள் தமிழர்களுக்குத் தீங்கு இழைத்தால், அப்போது நான் மௌனம் காக்கமாட்டேன். ஆனால், நாமல் அவ்வாறு செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதேபோல சஜித் நல்ல மனிதர், நல்லுள்ளம் படைத்தவர்; ஆனால் அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது. எனவே, நாமலே தற்போதைய தேர்வாக உள்ளார். எதிர்காலத்தில் நிலைமை மாறவும் கூடும்.

2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்வாகி, அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் நான் பேரம் பேசுவேன். அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் வடக்கைக் கட்டியெழுப்ப முடியும் எனக் கூறுவேன்.

நாமல் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் வடக்கில் அவருக்கு 10 முதல் 15 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கப்பெறக்கூடும். சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கப்பெறலாம்.

ஏனெனில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் அரசியல் ஒப்பந்தம் (டீல்) செய்து மக்களை ஏமாற்றக்கூடும். அதனைத் தடுப்பதற்கு நான் முயல்வேன்” – என்றார் அர்ச்சுனா இராமநாதன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles