தாய்வானுக்கு போர் விமானங்களை வழங்கியது அமெரிக்கா: சீனா கொதிப்பு

தாய்வானால் கடந்த 2019ஆம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட 66 புதிய F-16V பிளாக் 70 (F-16V Block 70) போர் விமானங்களில் முதல் கட்டமாக, இரண்டு விமானங்கள் பல மாதத் தாமதத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை தாய்வான் வந்தடைந்தன.

சீன இராணுவத்தின் அச்சுறுத்தல்களைத் தினமும் எதிர்கொண்டு வரும் தாய்வான் வான்படைக்கு இந்த வரவு பெரும் பலமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஜனநாயக ரீதியாக ஆட்சி செய்யப்படும் தாய்வானைத் தனது சொந்தப் பிராந்தியம் எனக் உரிமை கோரி வரும் சீனா, அந்நாட்டின் மீது ராணுவ அழுத்தங்களை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தனது முக்கிய சர்வதேச ஆதரவாளரான அமெரிக்காவிடம் கொள்முதல் செய்த ஆயுதங்கள் கிடைப்பதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகத் தாய்வான் குற்றம்சாட்டி வந்தது.

அமெரிக்க கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று வாஷிங்டன் தெரிவித்து வந்தபோதிலும், ட்ரம்ப் நிர்வாகம் தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்து அந்நாட்டில் கவலைகள் அதிகரித்து வந்த பின்னணியில், இந்த விமானங்கள் தாய்வானின் கிழக்குப் பகுதியில் உள்ள தைதுங் சிக்பாங் (Chihhang) விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளன.

ஹவாய் மற்றும் குவாம் வழியே பறந்து வந்த இந்த விமானங்கள் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணியளவில் தாய்வானில் தரையிறங்கின.

இது குறித்துத் தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே (Lai Ching-te) தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகையில், “தாய்வானின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்” எனக் குறிப்பிட்டு, அமெரிக்காவிற்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தாய்வான் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, விரைவில் மேலும் பல புதிய F-16V விமானங்கள் தைவான் வந்து சேரும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் வாஷிங்டனில் சந்தித்துப் பேசிய சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த முதல் இரு விமானங்கள் தாய்வானைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய F-16V விமானங்கள், சீன வான்படையின் ‘J-20’ ரக ஸ்டெல்த் (Stealth) போர் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ், ஆயுதங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளன.

இருப்பினும், தனது மிகவும் சக்திவாய்ந்த F-22 அல்லது F-35 ரக விமானங்களை தாய்வானுக்கு வழங்க வாஷிங்டன் இன்னும் முன்வரவில்லை.

சட்டப்படி தைவானுக்குத் தற்காப்பு உதவிகளை வழங்க அமெரிக்கா கடமைப்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் எதுவும் இல்லை.

அதேநேரம், தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்காவைச் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது F-16 விமானங்கள் வந்தடைந்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles