சுமார் 20 ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய்க் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் நிற்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய கச்சா எண்ணெயைச் சீனாவுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தன என்று குறிப்பிடப்படுகின்றது.
ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
வழக்கமாக, இந்தக் கப்பல்கள் ஈரானிய கச்சா எண்ணெயை மலேசியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதிக்குக் கொண்டு சென்று, அங்குள்ள பிற கப்பல்களுக்கு மாற்றிய பின்னர் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும்.
சுத்திகரிப்பு நிலையங்களில் சரக்கை இறக்கிய பிறகு, அடுத்தகட்ட சரக்கை ஏற்றுவதற்காக இந்தக் கப்பல்கள் ஈரான் திரும்புவதுண்டு.
ஆனால், அமெரிக்காவின் முற்றுகை மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்தச் சுழற்சியைப் பாதித்துள்ளன. இதனால், சில காலி கப்பல்களால் ஈரான் துறைமுகங்களுக்குத் திரும்ப முடியாமலோ அல்லது திரும்ப விரும்பாமலோ உள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
