கிறிஸ் கெய்லின் 13 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் பிரிடோரியஸ்

தென்னாபிரிக்காவின் CSA T20 Challenge தொடரில், ‘டைட்டன்ஸ்’ அணிக்காக விளையாடிய லுவான்-டிரே பிரிடோரியஸ் (Lhuan-dre Pretorius), ‘நைட்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து, T20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் பல வருட சாதனையை முறியடித்துள்ளார்.

புளோம்போன்டீனில் (Bloemfontein) நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதான பிரிடோரியஸ், T20 போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்க வெறும் 12 ரன்களே குறைவாக இருந்தார்.

இதற்கு முன் 2013இல் நடைபெற்ற IPL போட்டியில், ‘றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு’ அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் எடுத்த 175 ரன்களே T20 கிரிக்கெட்டில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தனது 3ஆவது T20 சதத்தைப் பதிவு செய்த பிரிடோரியஸ், தற்போது கெய்லின் அச்சாதனையை முறியடித்துள்ளார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரிடோரியஸ், 24 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 16 பந்துகளில் (மொத்தம் 40 பந்துகளில்) சதத்தையும் எட்டினார்.

தொடர்ந்து விளாசிய அவர், 58 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார்.

மேலும், ஆண்கள் T20 கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற சாதனையில் ஆரோன் பின்ச் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் சாதனையை (79 பந்துகள்) பிரிடோரியஸ் சமன் செய்துள்ளார்.

நைட்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்த இடதுகை தொடக்க ஆட்டக்காரர், 13 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார்.

எதிரணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் எகானமி ரேட்டும் 11-க்கும் அதிகமாகவே இருந்தது. பிரிடோரியஸின் அதிரடியால் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களைக் குவித்தது.

இது இத்தொடரின் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச அணியின் ஸ்கோராகும். (2022-இல் இதே அணிக்கு எதிராக டைட்டன்ஸ் எடுத்த 271/3 ரன்களே முதலிடத்தில் உள்ளது).

முன்னதாக இத்தொடரில் தேவால்ட் பிரேவிஸ் எடுத்த 162 ரன்களே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், தற்போது பிரிடோரியஸ் அதை முறியடித்துள்ளார்.

இத்தொடரின் வரலாற்றில் அதிகபட்ச ஐந்து அணி ஸ்கோர்களையும் டைட்டன்ஸ் அணியே தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2026-27 சீசனின் தனது முதல் போட்டியிலேயே பிரிடோரியஸ் இந்த பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles