அமெரிக்கக் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான மருத்துவ மீட்பு விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயணம் செய்த 6 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கிப் பறந்து கொண்டிருந்த மருத்துவ மீட்பு விமானம், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. பின்னர், அதன் சிதைந்த பாகங்கள் நான்டூகெட் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல் படை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் பெர்முடா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விபத்துக்குள்ளான இந்த விமானம், கனடாவைச் சேர்ந்த லாட்டிடியூட் ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
விமானத்தின் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படுவதற்கு முன்பு விமானம்7,300 மீட்டரிலிருந்து 3,300 மீட்டருக்கு செங்குத்தாகக் கீழே இறங்கியுள்ளது. மேலும், விமானம் கடற்கரையை நெருங்கியபோது கடுமையான மின்சாரக் கோளாறுகளைச் சந்தித்துள்ள விமானி, உடனடியாக அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்துக் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் தனது எக்ஸ தளத்தில், விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். தற்போது மீட்புப் படைகள் அப்பகுதியில் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
