கண்ணீர் மல்க விடைபெற்றார் லியோனல் மெஸ்ஸி!

அர்ஜென்ரீனா அணிக்காக தனது 208ஆவது மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கிய லியோனல் மெஸ்ஸி, தனது 126-வது சர்வதேச கோல் மற்றும் 2 உதவிகளுடன் அசத்தி, உணர்ச்சிகரமான முறையில் சர்வதேச கால்பந்து பயணத்துக்கு விடை கொடுத்தார்.

பியூனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பெனின் அணிக்கு எதிராக நடைபெற்ற நட்பு ஆட்டம், மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் “கடைசி டாங்கோ” என வர்ணிக்கப்பட்டது. 21 ஆண்டுகளாக அர்ஜென்ரீனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, 2 கோபா அமெரிக்கா பட்டங்கள் மற்றும் ஓர் உலகக் கோப்பையை வென்ற நிலையில் தனது சர்வதேச பயணத்தை நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் மெஸ்ஸியிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு கோலையாவது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 71ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இடது காலால் அபாரமாக கோலாக மாற்றிய 39 வயதான மெஸ்ஸி, பந்தை வலைக்குள் செலுத்தினார். இதையடுத்து அரங்கமே “மெஸ்ஸி… மெஸ்ஸி…” என்ற முழக்கத்தால் அதிர்ந்தது.

போட்டி முடிந்ததும் ரசிகர்களிடம் பேசிய மெஸ்ஸி, “என்றென்றும் இங்கு திரும்பி வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏனெனில் அர்ஜென்ரீனா தேசிய அணிக்காக விளையாடுவது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய மிக அழகான விஷயம். உண்மையிலேயே இதைவிட அழகானது எதுவும் இல்லை” என்றார்.

போட்டியின் தொடக்கத்தில் மெஸ்ஸிக்கு கிடைத்த சில வாய்ப்புகள் கோலாக மாறாததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமலேயே அவர் விடைபெறுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கோல் அடிப்பவர் என்பதைக் கடந்து அணியின் ஆட்டத்தை உருவாக்கும் வீரராகவும் மெஸ்ஸி தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

48ஆவது நிமிடத்தில் கோணர் கிக் மூலம் நிக்கோலஸ் ஓட்டமெண்டி தலையால் கோல் அடிக்க மெஸ்ஸி உதவினார். பின்னர் நிகோ பாஸுக்கு துல்லியமான பாஸ் வழங்கினார். அதை அவர் அற்புதமாக வளைத்து கோலாக மாற்றினார். இதன் மூலம் அர்ஜென்ரீனா 3-0 என்ற கணக்கில் பெனின் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்ததும் மொனுமென்டல் மைதானத்தின் வானில் டிரோன் கண்காட்சி நடைபெற்றது. மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் வானில் ஒளிர்ந்தன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பையை வென்றபோது மெஸ்ஸி கோப்பையைத் தூக்கி நிற்கும் புகழ்பெற்ற காட்சியும் இடம்பெற்றது.

மெஸ்ஸிக்கு பிரியாவிடை கொடுக்க மொனுமென்டல் மைதானம் பொருத்தமான இடமாக அமைந்தது. அர்ஜென்ரீனா அணிக்காக சர்வதேச அளவில் அதிக கோல்களை அவர் அடித்த மைதானம் இதுவே. இங்கு மெஸ்ஸி 19 கோல்களை அடித்துள்ளார். மேலும், 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜென்ரீனா தனது முதல் உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து அணி வீரர்களுடன் இம்மைதானத்தில்தான் அவர் ரசிகர்களுடன் கொண்டாடினார்.

“உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் விளையாடிய முதல் போட்டிக்காக இங்கு திரும்பிய நாள் எனது கால்பந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. அந்த நாளில் நான் கண்ட காட்சியை ஒருபோதும் மறக்க முடியாது. எனக்கு நடந்த மிக அழகான விஷயம் அது” என்று மெஸ்ஸி விதந்தார்.

அவரது இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மட்டுமின்றி அணியினரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தன.

இந்தப் போட்டி மெஸ்ஸிக்கான பிரியாவிடை நிகழ்வாக மாறியதற்கு மற்றொரு சான்றாக, ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் விளையாட்டு நிறுத்தப்பட்டது. அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற 10-ம் எண் வீரரான மெஸ்ஸிக்கு முழு மைதானமும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles