17,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் திருடப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு வந்த NudeLeaksTeens என்ற இணையதளத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 21 மற்றும் 25 வயதுடைய சகோதரர்கள் இருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடக்கு பிரான்ஸில் வைத்து குறித்த இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது பிட்காயின், எத்தேரியம், லைட்காயின் மற்றும் USDT போன்ற கிரிப்டோகரன்சி வடிவங்களிலிருந்த 700,000 யூரோ ($782,530) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களைப் பிரான்ஸ் புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்க காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து பிரான்ஸ் காவல்துறையினர் இந்த புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளக் கணக்குகளை ஹேக்கிங் செய்தல், சிறுவர்களை இணையவழியில் ஏமாற்றுதல் (“grooming”) மற்றும் பழிவாங்கும் நோக்கிலான ஆபாசப் பதிவுகள் (“revenge porn”) போன்ற பல்வேறு வழிகளில் திருடப்பட்ட பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை ‘தொகுப்புகளாக’ (Packs) இந்த ‘நியூட்லீக் ஸ்டீன்ஸ்’ தளம் விற்பனை செய்து வந்துள்ளது.
சிறார்கள் உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணைப் பற்றிய அடையாளத் தகவல்களையும் வழங்குமாறு தளத்தின் பயனர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கிரிப்டோகரன்சிகள் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த இணையதளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாகப் பிரான்ஸ் பொலிஸின் சைபர் குற்றப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
