அனோஜனுக்கு மரணதண்டனை இரத்து: சவூதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான பொறியியலாளர் சிவராசா அனோஜனின் தண்டனையை நீக்குவதற்கு அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தைப் பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானம் அனோஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் பெரும் நிம்மதியையும் ஆறுதலையும் அளித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“நட்புறவு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்பட்ட பொறுமையான இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள ஓர் இலங்கையருக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அனைத்துத் தரப்பினரின் தளராத முயற்சியினாலேயே இந்த நல்முடிவைப் பெற முடிந்தது.” என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசுக்குச் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, இந்தச் சட்டப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

“அனோஜனுக்கு எதிரான ஏனைய சட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவடையும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க அரசு தயார் நிலையில் உள்ளது. சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என்ற உணர்வைப் பெறக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” – என்றும் ஜனாதிபதி தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles