வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
