உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்குப் பதிலாக, தங்களுக்கு “எதுவும் கிடைக்கவில்லை” என்றும் அவர் குறை கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜெலென்ஸ்கி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரால் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடியும்” என்று கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஓவல் அலுவலகத்தில் நாங்கள் உரையாடியபோதே அவர் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவிலான உதவிகளை வழங்கியுள்ளோம்; ஆனால் பதிலுக்கு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதிக டீசல் விலையைத் தவிர வேறொன்றும் இல்லை,” என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
ட்ரம்பிற்கும் – ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான உறவு நிலையற்றதாகவே இருந்து வருகிறது. ஆனால், சமீபத்திய வாரங்களில் இந்த உறவு மேலும் மோசமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
