மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்ட திகதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்துவரும் விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, தேவைப்படின் மனிதாபிமான அடிப்படையில் அவரது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
