பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாளை (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் என புத்தசாசன அமைச்சு, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபைக்கு அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட சிறைச்சாலை சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக, வழக்கு நடவடிக்கையொன்றுக்காக ஞானசார தேரர் நாளை காவி உடையுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வினவியபோது, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல தேரர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரர் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார் என்பதை, தமது சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரருக்கு புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவிடம் வினவியபோது, ஞானசார தேரரை நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அது தொடர்பில் மகாநாயக்க தேரருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
