காணிகளை விடுவிக்கக் கோரி கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, மயிலிட்டி மக்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்துவரும் மக்கள், இன்று பெய்த கனமழைக்கு மத்தியிலும் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வாரங்கள் கடந்து மாதங்கள், வருடங்கள் என உருண்டோடும் நிலையிலும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“எமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கும், எமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கும் நாம் ஏன் இவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கின்றது?” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குற்றம் சாட்டினர்.

“அரசு கூறிய வாக்குறுதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இப்போது மீண்டும் மீண்டும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றது. அவர்களின் இந்தத் தொடர்கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்க நாம் தயாராக இல்லை. எமக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. எமது காணிகள் விடுவிக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளே” என்று மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

காணி விடுவிப்பு என்பது வெறுமனே நிர்வாக ரீதியான ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வுரிமை மற்றும் பூர்வீக மண்ணில் வாழ வேண்டும் என்ற அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து அரசு உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles