யாழ். வடமராட்சி பிரதேசத்தில் அண்மை நாள்களாகச் சிறுவர்கள் மத்தியில் இரத்தச் சோகை பாதிப்பு சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று மருத்துவ வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த தினத்தில் மாத்திரம் ஒரே நாளில் 12 பேர் இரத்தச் சோகை பாதிப்பு காரணமாகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர்களிடையே இந்த நோய்த் தாக்கம் அதிகரித்து வருவது பெற்றோரிடையேயும் சுகாதாரத் துறையினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வைத்தியசாலையில் பாரிய குருதித் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், விபத்துச் சந்தர்ப்பங்கள் மற்றும் குழந்தைப் பிரசவ அவசர சிகிச்சைகளின் போது உடனடியாகக் குருதி ஏற்றுவதில் பெரும் நெருக்கடி நீடித்து வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில், திடீரென இரத்தச் சோகை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையானது அந்தப் பகுதியில் மிகப் பாரிய குருதித்தட்டுப்பாட்டு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், வடமராட்சி பகுதியில் வசிக்கும் தன்னார்வ இரத்த கொடையாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், தங்களது பிரதேசங்களில் இரத்ததான முகாம்களை ஒழுங்கமைக்கக் கூடியவர்கள் அது குறித்து அறிவித்தால், நேரடியாக வந்து குருதி சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் பருத்தித்துறை இரத்த வங்கிப் பிரிவினர் (தொடர்புக்கு – 0212261345) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
