கனமழையைத் தொடர்ந்து இன்று அதிகாலை சுங்கை பூலோ பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, Kampung Kubu Gajah மற்றும் Paya Jaras Hilirரை இணைக்கும் பிரதான சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், அப்பாதையில் அனைத்து வாகனப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை சுமார் 2 மணியளவில் Sungai Subangங்கில் ஏற்பட்ட வலுவான நீரோட்டத்தால் ஆற்றங்கரை அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. Paya Jaras Hilir கண்காணிப்பு நிலையத்தில் 48 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீரோட்டத்தின் தாக்கத்தால் பாலத்தின் கட்டமைப்பு வலுவிழந்து இடிந்து விழுந்ததாக பெட்டாலிங் மாவட்ட பொதுப்பணித் துறை அறிக்கையொன்றில் கூறியது.
அச்சம்பவத்தில் சாலையின் பெரும்பகுதி கடுமையாகச் சேதமடைந்ததுடன், தார் மேற்பரப்பும் பெயர்ந்து, சாலையின் சில பகுதிகள் ஆற்றங்கரையில் சரிந்து விழுந்தன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளது. எச்சரிக்கைப் பலகைகள், பாதுகாப்புத் தடைகள் மற்றும் மாற்றுப்பாதை அறிவிப்புகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தைச் சரிசெய்ய தற்காலிக பாலம் அமைக்கப்படும் என்றும், பின்னர் நிரந்தரப் பாலம் கட்டப்படும் என்றும் பொதுப்பணித் துறை தெரிவித்தது. சுங்கை பூலோ சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அப்பாலம் இடிந்து விழுந்து சில சாலைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
