இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் சைவ மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்காகப் புதுடில்லி சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரைச் சந்தித்தபோதே இந்திய நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
‘இனச் சுத்திகரிப்பின் பின்னணியில் நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள்: காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் கதையாடல்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்திய நிதியமைச்சரைச் சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தின் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சைவ ஆலயங்களின் செயற்பாடுகளை முடக்கி, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் இந்திய நிதியமைச்சருக்கு அறிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் இந்திய நிதியமைச்சருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் எடுத்துரைத்துள்ளனர்.
“அதுமட்டுமன்றி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு முயற்சியும் அல்லது முன்னோக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அழுத்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தொடர்புடைய மாகாண சபைத் தேர்தலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையையும் தெளிவாக எடுத்துரைத்தோம்.”
தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் முன்வைத்த விடயங்களை மிகவும் கவனமாகச் செவிமடுத்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்ததாகவும் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும் ‘ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’ என டில்லி சர்வதேச மாநாட்டில் குறிப்பிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த விடயங்கள் தொடர்பாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் அதிக கவனத்தைப் பெற்றுக்கொள்வது சவாலானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழ்ச் செயற்பாட்டுக் குழு, அகில இந்திய சட்ட ஆசிரியர் பேரவை மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான இந்தியச் சங்கம் ஆகியன இணைந்து டில்லி சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
