ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் டிரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கேஷ்ம் தீவின் மீது ஏவப்பட்ட அமெரிக்காவின் எம்.கியூ.-1 ரக டிரோனை ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டுவீழ்த்தியதாக, ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
இதையடுத்து, ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் வெளியான இந்தச் செய்தி குறித்து அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கெனவே, கத்தார் மூலமாக அமெரிக்காவிடம் 7 நிபந்தனைகள் உடன் கூடிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இச்சூழலில், இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
