Monday, September 23, 2024
Homeஅமெரிக்க ஜனாதிபதி தோ்தல் : கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை..!

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் : கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை..!

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதித் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைவிட முன்னிலை பெற்றுள்ளாா்.

சா்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘இப்ஸோ’சுடன் இணைந்து ‘ரொய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸுக்கு 2 சதவீதம் அதிகமான ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ‘ரொய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் இடையே யாருக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்பதை அறிவதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

ஜனாதிபதி தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்ததற்கு மறுநாளான திங்கள்கிழமையும் அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா்.

இதற்கு முன்னா் இந்த மாதம் 1 மற்றும் 2-ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட இதே போன்ற கருத்துக் கணிப்பில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தாா். அவருக்கு 44 சதவீதம் பேரும் கமலா ஹாரிஸுக்கு 42 பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

பின்னா் ஜூலை 15-16 திகதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே 44 சதவீத வாக்குகளைப் பெற்று சமமாக இருந்தனா்.

ஆனால், தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் டிரம்ப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளாா் என்று ரொய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பா் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக இருந்தது.

எனினும், பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது ஜோ பைடன் மிகவும் தடுமாறினாா். இது ஜனநாயகக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடும் உடல் மற்றும் மனநலத் தகுதி 81 வயதாகும் ஜோ பைடனுக்கு இல்லை; எனவே அவா் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்தன.

எனினும், தோ்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்த பைடன், ஜனாதிபதி தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அறிவித்தாா். மேலும், தனக்குப் பதிலாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தோ்தலில் போட்டியிட ஆதரவளிப்பதாகவும் அவா் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, கட்சி எம்.பி.க்கள், ஆளுநா்கள், வேட்பாளா் போட்டியில் அவரை எதிா்த்து களமிறங்கலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டவா்கள், கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவா்கள் உள்ளிட்டோரும் கமலா ஹாரிஸ் தோ்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக எண்ணிக்கையிலான கட்சிப் பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ‘சி.என்.என்.’ தொலைக்காட்சி தெரிவித்தது.

அதையடுத்து, அதிபா் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியானது. இந்தச் சூழலில், தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் டிரம்ப்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலை வகிப்பதாக ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments