Sunday, September 22, 2024
Homeதமிழக மீனவரின் சடலம் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!

தமிழக மீனவரின் சடலம் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில், மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் இன்று (3) அதிகாலை கடல் வழியாக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை சென்றடைந்தனர்.

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும் உள்ளாடைகளுடன் கடற்படை வீரர்கள் அழைத்துச் சென்று விசாரித்ததாக உயிர் தப்பி வந்த இந்திய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மலைச்சாமி (59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் மாயமாகி உள்ளார்.

மேலும் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று மதியம் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இரண்டு மீனவர்கள் வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படையின் ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் மற்றும் மலைச்சாமியின் உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பித்ரா கப்பலில் ஒப்படைத்தனர். உடலை பெற்று கொண்ட கடற்படை வீரர்கள் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திற்கு எடுத்து வந்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மலைச்சாமியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அவரது வீட்டில் ஒப்படைக்கபட்டது.

நடுக்கடலில் திடீரென வந்த இலங்கை கடற்படை ரோந்து படகு மீன்பிடி படகின் மீது மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியதாகவும், படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஒருவர் பிணமாக மீட்கப்பட்டதாகவும், கடலில் காணாமல் போன மீனவர் ராமசந்திரனை இலங்கை கடற்படை தேடி வருவதாக உயிர் பிழைத்து வந்த மீனவர் தெரிவித்தார்.

மேலும் தங்களை இலங்கை கடற்படை உள்ளாடைகளுடன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று உணவு கூட கொடுக்காமல் பல மணி நேரம் விசாரித்து பின்னர் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்ததாக உயிர் பிழைத்து மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யாழ்பாணத்தில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பத்திரமாக தாயகம் அனுப்பி வைத்ததாக மீனவர்கள் இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments