வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இது தவிர, ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதுடன், மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கள் தொடர்பான அறிக்கைகளைத் தாம் ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அதிகாரிகளினால் வெளியிடப்பட்ட சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை தெற்கு லெபனானிலும் பெய்ரூட்டின் தெற்கிலும் தாக்குதல்கள் தொடர்வதாகச் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
காசா மற்றும் லெபனானில் உள்ள 175 பயங்கரவாத இலக்குகளைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான வாஃபாவின் (Wafa) அறிக்கைக்கு அமைய மக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு வளாகம் ஒன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தற்போது தகவல் தொடர்பு மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரத்தில் உள்ள இந்தோனேசிய மருத்துவ மனையைக் குறிவைத்து இஸ்ரேலிய துருப்பினரால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக நகர்ப்புற ஏதிலிகள் முகாம்கள் உள்ளடங்கிய மக்கள் செறிந்து வாழும் ஜபாலியா பகுதியை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்துத் தாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நேற்று முன்தினம் மாலை வரை 33 பேர் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அந்த பகுதிக்கு எந்தவிதமான நிவாரண உதவிகள் வரவில்லை என நிவாரண நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.