பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் (Michel Barnier) நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உரையாற்றவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை அந்த நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.
தமக்குண்டான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதீட்டு திட்டத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு அவர் முயற்சித்தமையை அடுத்து எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்டது.
குறித்த அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 331 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த பின்னணியில், பிரான்ஸின் புதிய பிரதமருக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டின் லெகோர்னு (Sébastien Lecornu) உள்விவகார அமைச்சர் புருனோ ரீடெய்லியோ (Bruno Retailleau) மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பெய்ரூ (François Bayrou) ஆகியோரின் பெயர்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.