ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் குனுகிசான்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை குனுகிசான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தருதிஹி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குனுகிசானை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து குனுகிசான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வந்தார். அவர் வெளியே வந்த நாளில் இருந்து தனது மீது பாலியல் புகார் கொடுத்த சிறுமியை தேடி வந்தார். சிறுமி ஜார்சுகுடா நகரில் தனது அத்தை வீட்டில் தங்கி பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார்.
இதனை தெரிந்து கொண்ட குனுகிசான் சிறுமியிடம் சென்று தனது மீது புகார் தெரிவித்துள்ள பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்கும் படி பேசினார். அதற்கு அந்த சிறுமி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் குனுகிசான் சிறுமி மீது ஆத்திரமடைந்தார். அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சிறுமி வேலைக்கு சென்று வரும் நேரத்தை கண்காணிக்க தொடங்கினார். கடந்த 7-ந் தேதி மற்றொரு வாலிபருடன் சேர்ந்து சிறுமியை கடத்தினார். அவர்கள் பைக்கில் சிறுமியை கடத்தி சென்றனர். ரூர்கேலா மற்றும் தியோகரை இணைக்கும் சாலை பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு வைத்து கத்தியால் சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிராமணி ஆற்றில் தர்கேரா நாலில் மற்றும் பலுகாட் பகுதியில் வீசினர்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் கடந்த 7-ந் தேதி ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை பைக்கில் 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. 2 வாலிபர்களுக்கு மத்தியில் சிறுமி இருந்தார். 2 வாலிபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்கள்குறித்த அடையாளம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்திய வாலிபர் குனுகிசான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குனுகிசானை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சிறுமியை கடத்தி கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் குனுகிசானை கைது செய்தனர். பிராமணி ஆற்றில் சிறுமியின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.