கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையைக் கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் எக்ஸ் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு, சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும் என்று பதிவிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றைக் கைவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்குப் பதிலாக இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது என்றும் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.