பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இதற்கிடையே காசாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பாலஸ்தீனம் மற்றும் காசா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் காசா பகுதியில் இருந்து 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
மேலும் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, டிரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக் கான டாலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பாலஸ்தீனியர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.