Saturday, February 7, 2026
HomeMain Newsடி20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

டி20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில், ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரண்டன் கிங் 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாய் ஹோப் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசையில் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் ஸ்கொட்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார். அவர் வெறும் 36 பந்துகளில் 64 ஓட்டங்களை (6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) குவித்து அணியின் ஓட்டத்தை உயர்த்தினார்.

அவருக்கு ஆதரவாக விளையாடிய ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ரோவ்மேன் பவல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்கொட்லாந்து தரப்பில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளையும், சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய ஸ்கொட்லாந்து அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

ஸ்கொட்லாந்து அணி சார்பில் ரிச்சி பெரிங்டன் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். டாம் புரூஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular