செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் ‘நீதியின் ஓலம் 2’ போராட்டத்திற்கு அனுமதி வழங்கியமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியுள்ளது.
குறித்த போராட்டம் இனங்களுக்கிடையே அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதுடன், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விளக்கம் கோரும் கடிதம், யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை தவிசாளரின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுப்பதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பேரணியாகச் சென்று மனு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தவிசாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொலிஸ் அனுமதியின்றி இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்றும், அதற்கான சட்டபூர்வ அடிப்படை என்ன என்றும் பொலிஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள தவிசாளர் தியாகராஜா நிரோஷ், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதிக்கான ஜனநாயக ரீதியான போராட்டத்தை பிரதேச சபையின் பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், மனித உரிமைகளையும் மக்களின் உரிமைகளையும் கருத்திற்கொண்டு அதற்கு அனுமதி வழங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.
