யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு நேற்று திங்கட்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.
இதன் போது முன்னாள் கலைப்பீடாதியும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவருமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றி விளக்கமளித்தார்.
அங்கு அவர் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு:
இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், வழங்கப்பட இருப்பதுடன், ஒருவர் வியாபார நிர்வாகத்தில் சான்றிதழையும் பெற இருக்கின்றார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 376 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை எண்மரும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 16 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 7 பேரும், சுகாதார முகாமைத்துவத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை ஒருவரும், பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தை ஒருவரும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப் பட்டத்தை ஒருவரும், கல்வியில் முதுமாணிப்பட்டத்தை 154 மாணவர்களும், நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத்தில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 12 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 118 மாணவர்களும், வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை 42 பேரும் பெறுவதுடன், ஆங்;கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தலில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 16 பேரும் பெறவிருக்கின்றனர்.
உள்வாரி மாணவர்களாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 137 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும்;, விவசாய பீடத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள்; விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.
இவர்களுடன் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திலிருந்து மருந்தகவியல்மாணி சிறப்புப் பட்டத்தை 49 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப்பட்டத்தை 64 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 46 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.
அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 358 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 11 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 107 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை இருவரும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப்பட்டத்தை 333 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 182 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 29 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 91 மாணவர்களும், கலைமாணி சிறப்புப் பட்டத்தை (பழைய பாடத்திட்டத்தில்) ஐவரும், கலைமாணிப் (பொது) பட்டத்தை 15 பேரும் பெறவிருக்கின்றனர்.
மேலும், சேர். பொன் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக்; கலைகள் பீடத்தைச் சேர்ந்த 169 மாணவர்கள்;; நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும், மேலும் நடனம் மற்றும் இசையில் நுண்கலைமாணிப் பட்டத்தை (பழைய பாடத்திட்டத்தில்) ஒவ்வொருவரும் பெறவிருக்கின்றனர்.
இவர்களுடன், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 97 பேர் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 46 பேர் பிரயோக விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 79 பேர் விஞ்ஞானமாணிப் (பொதுப்) பட்டத்தையும், 18 பேர் கணினி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 23 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பெறவுள்ளனர்.
இப்பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை பங்குனி மாதம் 5ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை அன்றே பிற்பகல் 4.00 மணிக்கும் இடம்பெறவிருக்கின்றது.
சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொடர்பியல் துறையின் ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப்; பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் குழந்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த இருக்கைப் பேராசிரியர்; கீதாஞ்சலி சத்தியதாஸ் “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பிலும் நிகழ்த்தவிருக்கின்றனர். இந் நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இனிதே நிறைவு பெறும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
