ஏற்கனவே உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசு கொண்டுவருவது போல் செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாறி மாறி வந்த அரசுகள் எவையாக இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்களும் கொள்கைகளும் ஒன்றுதான் என்பதை அநுர அரசும் இப்போது நிரூபித்து இரக்கிறது. தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மைத்தன்மையை உலகத்திடம் மறைப்பதற்காக அவர்களுடைய காணிகளை இன்னும் விடுவிக்காமல், அரசியல் கைதிகளை இன்னும் விடுவிக்காமல், அவர்களது நிலங்களில் புத்த விகாரைகளை அமைத்துக் கொண்டு வரலாற்று வன்முறை ரீதியான நிகழ்வில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே 47 வருடங்களாக இந்த நாட்டிலே நாலு இலட்சத்திற்கும் அதிகமான மக்களையும், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்திருக்கின்றோம். அதனை இன்னமும் தக்க வைப்பதற்காகவே உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் என்ற போர்வையில் புதிய சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது.
புதிய சட்டத்தில் மிக மோசமான இடங்கள் சொல்லப்படுகிறது. பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான வரையறை சொல்லப்படவில்லை. ஒன்று கூடுகின்ற உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமான ஒரு உப பொலிஸ் பரிசோதகர் நினைத்தால் ஒன்று கூடுகின்ற உரிமையை மறுக்கலாம், மக்களை கைது செய்யலாம். ஒருவரை கைது செய்தால் ஜனாதிபதியின் கையப்பத்தினூடாகவே அவரை தடுப்பு காவலில் வைத்திருக்கலாம் என்ற நிலை இல்லாமல் ஆக்கப்பட்டு, பொலிஸாரே அதை செய்யலாம் என புதிய சட்டத்தில் காணப்படுகிறது.
புதிய சட்டம் என்பது பழைய சட்டத்தைவிட மோசமானது. ஆகவே இந்தச் சட்டத்தை விட முன்பு இருந்த சட்டம் பரவாயில்ல என எமது மக்கள் உணர்வார்கள். அதன் அடிப்படையில் பழைய சட்டத்தை தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இந்த அரச ஈடுபடுகிறது – என்றார்.

















