மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவானது இந்தியா

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் 52ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெற்றிகரமாகத் துரத்திய இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ‘வாழ்வா சாவா’ போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் ரொஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றார். அதேபோல், ரொவ்மன் பவல் 34 ஓட்டங்களுடனும், ஜேசன் ஹோல்டர் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன் (Sanju Samson) வெறும் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களைக் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்கு உறுதுணையாகத் திலக் வர்மா 15 பந்துகளில் 27 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles