இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான முக்கிய குழு (பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா) சார்பில் விசேட அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்தார்.
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்புச் சட்டம்’ முந்தைய சட்டத்தை விடவும் பாரிய கவலைகளைத் தோற்றுவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேநேரம், இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளபோதிலும், அந்தச் செயல்முறை மிகவும் மந்த கதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்குப் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட சமூகங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமையை வரவேற்ற தூதுவர், இது நல்லிணக்கத்திற்கு மிக அவசியம் எனத் குறிப்பிட்டார்.
நிலைமாறுகால நீதி, இனவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை முக்கிய குழு கவனத்தில் கொண்டுள்ளது.
இருப்பினும், களத்தில் அதன் முடிவுகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும், முக்கிய நிறுவனங்கள் இன்னும் பலவீனமாகவே இருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வலுவான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு நிறுவனங்கள் அவசியம் எனச் சுட்டிக்காட்டிய தூதுவர், திட்டமிடப்பட்டுள்ள சுயாதீன அரச வழக்குதொடுநர் அலுவலகம் வெறும் பேச்சளவில் இன்றிச் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
இறுதியாக, மோதல் காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட முக்கிய குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டன.
